தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு ஆரம்பம் முதலே மெத்தனம் காட்டி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பும், கண்காணிப்பில்லாத சூழலில் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கடந்த ஜூன் 25ம் தேதி தமிழகம் வந்த ஒருவர், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அவரது மனைவி பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தனது கணவர் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில் தொடர்ந்து வேறு விவரங்கள் கிடைக்காததால், மேற்கொண்டு தகவல்கள் பெற ஊரிலிருந்து தொடர்புகொண்டுள்ளனர். ஆனால், ஹோட்டல் தரப்பில் சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
பின்னர் தொடர்புகொண்டு அவர் குளியலறையிலேயே இறந்துகிடந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது அவரது மனைவிக்கும், உறவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அபாயம் காரணமாக தனிமைப்படுத்தவரை கண்காணிக்கத் தவறிய அரசும், தனியார் ஹோட்டல் நிர்வாகமுமே தனது கணவரின் மரணத்திற்குப் பொறுப்பு என அப்பெண் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
தனக்கு பெற்றோர், உடன் பிறந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் ஒன்றரை வயதுக் குழந்தையோடு, தற்போது தன் கணவனை இழந்து தவிப்பதாகவும் தன் கணவனின் மரணத்திற்குக் காரணமான அரசும், ஹோட்டல் நிர்வாகமும் பதில் கூற வேண்டும் எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளது காண்போரைக் கலங்கச் செய்கிறது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எளியவர்களின் கண்ணீருக்கு நீதி கோரியுள்ளார்.
அவரது பதிவில், “‘ஹோட்டல்ல தனிமைப்படுத்தின என் வீட்டுக்காரரை அழுகிய நிலையில் போஸ்ட்மார்டம் பண்ணி பிணமா கொடுத்துட்டாங்க சார்’ - கதறி அழும் சந்திராவை தேற்ற வார்த்தைகள் இல்லை. சிங்கப்பூரிலிருந்து வந்த இவரின் கணவருக்கு கொரோனா கிடையாது. சென்னை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர் குளியலறையில் இறந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவரைக் கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்குத் தனிமைப்படுத்த வேண்டும்? வெறும் கணக்குக் காட்டுவதற்கா? எளியவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது. சந்திராவுக்கான உதவிகளை கழகம் முன்னின்று செய்யும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.