கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தக் கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நெய்வேலி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளா ஃபேஸ்புக் பதிவு வருமாறு :
“நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். 17 பேர் காயமடைந்துள்ளார்கள். இன்னும் பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்திய அளவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு என்பது மிக மிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துகிறது. தொடர்ந்து உரியக் காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததும், புதுப்பிக்கப்படாததும்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நெய்வேலி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் இன்றைய தினம் ஆறு உயிர்களை இழந்துள்ளோம்.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. மே 7-ம் தேதி நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தார்கள். இப்போது 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். இப்படி விபத்துக்களும் உயிரிழப்புகளும் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களது பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டியது நெய்வேலி நிறுவனம்தான்.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் அருண்குமார், பத்மநாபன், வெங்கடேசப் பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயம்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளித்து அவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். இறந்தவர்கள் குடும்பத்துக்கும், காயம்பட்டவர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை நிர்வாகம் வழங்க வேண்டும். இனியொரு முறை விபத்து ஏற்படாது என்றும், இனியொரு தொழிலாளி பாதிக்கப்பட மாட்டார் என்றும் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும். நிறுவனத்தைப் புதுப்பித்து உயிரிழப்புகளைத் தடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.