சாத்தான்குளத்தில் தந்தை மகனான அப்பாவி வியாபாரிகள் இருவரின் உயிர்கள் காவல்துறையினரால் கொடூரமாக பறிபோன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோன்று ஊரடங்கு நேரத்தில் போலிஸாரின் அடாவடிகள், அதிகார அத்துமீறல்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. அத்தியாவசிய தேவைக்காக அரசு குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வருபவர்கள் மீது தேவையின்றி வழக்குகளைப் பதிவு செய்வதும், அவர்கள் மீது தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தாக்குதல் நடத்துவதும் அண்மைக்காலமாக வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற 25 வயது இளைஞர் எம்.எம்.டி.ஏ பகுதியில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பைக்கில் கடந்த ஜூன் 19ம் தேதி வந்திருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த அண்ணாநகர் போலிஸார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.
சதாம் உசேனிடம் காவல் ஆய்வாளர் கண்ணன் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை என கூறியதற்கு அவர் மருந்து வாங்கக் கூட வெளியே வரக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பொது மக்கள் சூழ்ந்ததால் ஆய்வாளர் கண்ணன் சில போலிஸாரை வரவழைத்து இளைஞர் சதாம் உசேனை சரமாரியாக தாக்கி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொதுமக்கள் வீடியோ எடுத்ததை அடுத்து பெரும் பரபரப்பாகியுள்ளது. மேலும், அரசு அனுமதித்த நேரத்தில் கூட வெளியே வந்து பொருட்களை வாங்க போலிஸார் அனுமதிக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்றும், மக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து ஊரடங்கு விதிமீறல் எனில் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இளைஞரை போலிஸார் தாக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி 4 வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இளைஞரை தாக்கிய போலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக விளக்கமளித்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துச்சாமி, மருந்து வாங்குவதாகக் கூறி அந்த இளைஞர் பையுடன் அரிசி வாங்கச் சென்றதாலேயே அவரது வாகனத்தை பறிமுதல் செய்ததாகக் கூறியுள்ளார்.