கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மார்ச் 25ம் தேதியில் இருந்து இன்றளவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறது. அரசு 50 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தினாலும் அவை உரிய நேரத்தில் அவர்களின் தேவைக்கு சென்றடையவில்லை.
இதனால் மேலும் மனமுடைந்தவர்கள் ரயில், பேருந்தை நம்பி பயணில்லை என மீண்டும் சாலை மார்க்கமாகவே நடக்கத் தொடங்கி நடந்தும் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநில தொழிலாளர்களின் நிலை இப்படி இருக்கிறதென்றால், உள்ளூர்களில் உள்ள தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் நகரங்களுக்குச் சென்று தொழில் ஈட்ட முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அதுபோல, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள பிற மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்துள்ளதால் சற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது வெளிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று கடந்த 10 நாட்களாக தொழிலாளர்களுக்கு இலவசமாக பேருந்தை இயக்கி வருகிறது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் இந்த சேவையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கியுள்ளது.
எஸ்.எஸ்.ஆர்.பி.எஸ் என்ற நிறுவனம் தன்னுடைய 7 பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணத்தை வழங்கி வருகிறது. இந்த தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அரசு ஆணையின் படி 35 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
2 மாதத்துக்கும் மேலும் வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு இலவச பயணத்தை வழங்கியுள்ள தனியார் பெருந்து நிறுவனத்துக்கு மக்கள் நன்றியுடன் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தனியார் நிறுவனங்களே கட்டணமில்லா சேவையை அளிக்கும் போது, அரசு பேருந்துகளிலும் ஊரடங்கு முடியும் வரை இலவச பயணச் சேவையை தொடங்கினால் மக்களுக்கு நலம் பயக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.