கொரோனா தொற்றை கையாள்வதில் மத்திய பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தத்துவத்தை குறிப்பிட்டு இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்து 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 9,524 ஆக உள்ளது. சமீப சில நாட்களாக தினந்தோறும் 10,000 என்ற அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு நான்கு முறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் தற்போதுதான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, கொரோனா தாக்கம் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” என்ற ஐன்ஸ்டீனின் தத்துவத்தை குறிப்பிட்டு, ஊரடங்கால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதாகவும், கொரோனா பாதிப்பு தவறான வளைவை நோக்கிச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.