ஊரடங்கு அமலில் இருந்தபோதும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து மது வாங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியிலும் அரசாணை வெளியான பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த போலிசார் நால்வர் தமிழக எல்லைக்குள் நுழைந்து போதையில் இருந்தவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டியில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்களான மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மது குடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை தலைமையகத்திற்கு புகார் சென்றது, இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்து இருப்பதும், மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய உயர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார். ஆகவே, 4 பேர் மீதும் திருக்கனூர் போலிசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்கள் மூவரும் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வைரஸ் பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலிசார் தேடி வருகின்றனர்.