கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து நிறுவனங்களுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதனையடுத்து பல மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தது. தமிழகத்திலும் சென்னையை தவிர பிற மாவடங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது அ.தி.மு.க அரசு. பின்னர் கடைகள் திறக்கப்பட்ட இரண்டே நாளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் குடிக்கு அடிமையான பலர் பல விபரீத முடிவுகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூரில் மது போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்துவருவர் சாமிநாதன். திருத்தணியை சேர்ந்த சாமிநாதன் மதுவுக்கு அடியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தெரிந்த நபர்கள் தற்போது மது கிடைக்காததால் வார்ணீஷ்டன் குளிர்பானங்களை கலந்து மது போதைக்காக குடிப்பதாக சாமிநாதனுக்கு தெரியவந்துள்ளது.
இதனையட்டுத்து நேற்று இரவு அதைப்போல் சாமிநாதனும் குளிர்பானத்தில், வார்ணீஷைக் கலந்துக் குடித்துள்ளார். அதிகாலை வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.