தமிழ்நாடு

எதிர்ப்பால் பணிந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் - மன்னிப்பு கோரி இழப்பீடும் வழங்கினார்!

வியாபாரிகளிடம் தான் செய்த தவறை உணர்ந்து, வருத்தம் தெரிவித்து, கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் வழங்கியுள்ளார்.

எதிர்ப்பால் பணிந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் - மன்னிப்பு கோரி இழப்பீடும் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் முழுஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் நேற்றைய தினம் வாணியம்பாடி காய்கறி சந்தையில் ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மற்றும் சில அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, நடைபாதையில் காய்கறி பழங்களை விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஊரடங்கு விதிமீறல் நடந்திருப்பதாகக் கூறி காய்கறி பழங்களை தரையில் தள்ளி ரோட்டில் வீசியுள்ளார்.

இந்த நோய்தொற்றுக் காலத்திலும் வீட்டில் இருந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல சிரமங்களை சந்தித்து வியாபரம் நடத்தும் ஏழை நடுத்தர வியாபாரிகளிடம், இரக்கமற்ற முறையில் ஆணையர் நடந்து கொண்டது கடும் கண்டனங்களுக்கு ஆளானது.

மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகராட்சி ஆணையர் சிசில் தாமசின் இந்த செயலுக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் "வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என பதிவிட்டிருக்கிறார்.

கண்டனங்கள் அதிகரித்த நிலையில், நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், தான் செய்த தவறை உணர்ந்து, வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார். மேலும் நகராட்சி விதிகளை முறையாக கடைபிடிக்கவும் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories