வாணியம்பாடி சந்தையில் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி, காய்கறி பழங்களை தரையில் தள்ளி வியாபாரிகளிடம் அத்துமீறியுள்ள நகராட்சி ஆணையர் சிசில் தாமசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஊரடங்கு விதிமீறல் நடந்திருந்தாலும், அதை கண்டிப்பதை விட்டுவிட்டு, எளிய வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படும் வகையில் இரக்கமற்ற முறையில் அவர் செயல்பட்டிருப்பது பார்ப்போரை ஆத்திரமூட்டுவதாக உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சிசில் தாமசின் இந்த செயலுக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் "வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என பதிவிட்டிருக்கிறார்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறும் இது போன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் குரலாக உள்ளது.