கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவை தவிர, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு மேலும் இரு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்பட பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
விழித்திருங்கள் - விலகியிருங்கள் - வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை மக்கள் அனைவரும் பின்பற்றவேண்டும். ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30 வரை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.