உலகம் முழுவதும் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவிய வைரஸ் இன்னும் உலகில் உள்ள 180 நாடுகளை தன்வசப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,152-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட 21 நாள் ஊரடங்கு எப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு கொண்டுவரப்பட்டாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மூன்று வாரம் அவகாசம் தேவைப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் குழு கூடி நாட்டின் நிலமையை ஆய்வு செய்கிறது. அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இன்று அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. 33% பங்கேற்புடன் அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கில் இருந்து சில துறைகளுக்கு தளர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அது தொடர்பான ஆலோசனைகளை இன்று நடத்துகிறது. மத்திய தொழில்துறையானது 25% தொழிலாளர்களுடன் முக்கிய தொழில்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.
விவசாயம், உணவு பதப்படுத்தல் தொடர்பான தொழில்கள், ஜவுளி, வாகன தயாரிப்பு, மின்சாதன உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது, குறைந்து வரும் இடங்களில் தளர்வை ஏற்பத்துவது என்கிற அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பிரதமர் சனிக்கிழமை முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க ஒருமித்த கருத்து முன் வைக்கப்பட்டது.
இதுவரை மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, உத்தராகண்ட், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை தாங்களாகவே நீட்டி அறிவித்தன. கேரள மாநில அமைச்சரவை இன்று காலை கூடி முடிவு செய்கிறது.
ஆனால் தமிழக அரசு தானாக அறிவிக்காமல் மத்திய அரசு சொல்லும் என தாமதப்படுத்தி வருகிறது. ஆனால் ஊரடங்கை நீடிக்கப்பட்டால் தமிழக அரசு எண்ண நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாமல் மக்கள் குழம்பிபோய் உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு இன்றோ நாளையோ ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.