தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மக்களிடம் இன்று பேசினார். அவரது உரையில் குறிப்பிட்டதாவது...
" கொரோனா வைரஸ் உலக நாடுகளில் காட்டு தீ போல பரவி வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்.
மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. 10,158 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக உள்ளன. அரசு சார்பில் 3,780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக அட்டை வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும். வீடற்ற, ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதை அரசு நிச்சயம் ஏற்பாடு செய்யும்.
ஏப்ரல் மாதத்திற்காக அரிசி, பருப்பு, சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள், ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகங்கள் நாள் முழுவதும் திறந்திருந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது அல்ல. வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அவர்களோடு இருந்தவர்கள் அனைவரும் முன் வந்து சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுங்கள்.
21 நாட்கள் ஊரடங்கு விடுமுறை அல்ல; நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசின் முக்கிய நடவடிக்கை என்பதை உணருங்கள்.
பால், இறைச்சி, மருந்து தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்தை கடைபிடியுங்கள். சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனையை அணுகுங்கள்.
அரசு உதவி மைய எண்களான 104, 1077க்கு அழையுங்கள். அத்தியாவசிய தேவை கருதி வெளியே செல்பவர்கள் கை, கால், முகத்தை நன்றாக கழுவுங்கள்.
விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு - இந்த வாக்கியங்களை கடைபிடியுங்கள். அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நிச்சயம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்.
சாதி, மத, பேதம் கடந்து கொரோனாவை எதிர்த்துப் போராடி, மாநில மக்களின் நலனைக் காப்போம்." என்று தனது உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.