தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் குறிப்பு வாசித்த அவைத்தலைவர் தனபால், திராவிட கொள்கையில் ஆலமரமாக இருந்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞருடன் பயணித்தவர். பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சுவரை சிறிதும் சிதறாமல் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மொழி உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் பேராசிரியர் என புகழஞ்சலி செலுத்தினார்.
சட்டப்பேரவையில் ஜனநாயகம் காக்க கடைசிவரை மரபுகளை கடைப்பிடித்து வாழ்ந்தவர் பேராசிரியர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டது. அமைச்சராகவும், அவை முன்னவராகவும் சிறந்து விளங்கியவர். எளிமை அடக்கம் உள்ளிட்ட உயர்ந்த பண்புகளை இயற்கையாகவே கொண்ட பேராசிரியரின் மறைவு பேரிழப்பு என்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரது மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ ப.சந்திரன் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை வருகின்ற புதன்கிழமைக்கு (மார்ச் 11) சபாநாயகர் ஒத்திவைத்தார். அரசுத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த ஏப்ரல் 9-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், கொரோனா பாதிப்பு, குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.