“மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் குறித்து உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடல் பின்வருமாறு :
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கிறது சட்டப்பேரவை. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் என்றால், அவை மாநகரம் தொடங்கி குக்கிராமம் வரை, மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதற்கேற்ப முறையான நிதி ஒதுக்கீடுகள் இருக்கும்.
எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளைச் செவிமடுத்து, அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் காலத்தே காண்கிற வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். காரணம், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், இந்தியத் திருநாடு போற்றிய மாபெரும் அரசியல் தலைவர்; ஜனநாயக மாண்புகளைப் போற்றி அவற்றின் வழி செயல்பட்டவர். அடித்தட்டு மக்களின் தேவைகள் முதல், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்கள் வரை, அனைத்தையும் நன்றாக அறிந்தவர். அப்படித்தான் நம்மையும் அவர் ஆளாக்கியிருக்கிறார். அவரிடம் அரசியல் பயின்ற நாம் அதே வழியில், இம்மியும் பிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க அரசின் அரசியல் என்பது முற்றிலும் வேறுவிதமானது; அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்பில்லாதது; சந்தர்ப்பவாதத்தில் தோய்ந்தது. அதுவும், அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க அரசு என்பது நூலில் ஆடும் பொம்மையாக உள்ளது. பல வகை பொம்மைகளைப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நூலில் கட்டி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி எஜமானர்கள். அந்த எஜமானர்களிடமிருந்து, மாநிலத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெறுவதற்கான வேட்கையோ வலிமையோ இந்த அடிமை அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதை, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் அம்பலமாக்கிவிட்டன.
நிதி நிலை அறிக்கை மீது தி.மு.கழகத்தின் சார்பில் பேசிய கழக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பொருளாதாரம் சார்ந்த பொருத்தமான புள்ளிவிவரங்களுடன், நிதி நிலைமையைக் கையாளத் தெரியாத இந்த அரசின் தோல்வியைத் தோலுரித்துக் காட்டினார்.
பேரவையிலிருந்து வெளியே வந்தபோது செய்தியாளர்கள் என்னிடம் நிதிநிலை அறிக்கை பற்றி கேட்டதற்கு, “நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் 10வது பட்ஜெட்டைப் படித்திருக்கிறார். ஆனால், யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்த 2011ஆம் ஆண்டு வரை ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன்சுமை, அ.தி.மு.க அரசு பதவியேற்று 9 ஆண்டுகளுக்குள் ரூ.4லட்சம் கோடியாகி, 3 மடங்கு அதிகரித்திருப்பதைத் தான் இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கி இருப்பதுதான் மர்மமானதாக உள்ளது. இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளனர்” எனக் கூறினேன்.
பொதுமக்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை, எடப்பாடி பழனிச்சாமி அரசின் பட்ஜெட் மீதான தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ச்சியாகக் காண முடிந்தது. எந்தத் துறையினருக்கும் எவ்விதப் பயனுமற்ற பட்ஜெட் இது என்பதை எவரும் மறுக்க முடியாது.
நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத் தொடரில் மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு, அது குறித்து விவாதிப்பது வழக்கம். அந்த வகையில், மத்திய பா.ஜ.க அரசால் மதரீதியாக இந்தியாவைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் திரண்டு போராடிய முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலையும், ஆண்-பெண்-குழந்தைகள் என்ற பேதமின்றி பலரிடமும் அத்துமீறி அநாகரிகமாக நடந்ததையும் வன்மையாகக் கண்டிக்கும் வகையில் பேரவையில் கருத்துகளை எடுத்து வைத்ததுடன், அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தை நடத்தியோருக்கும் காவல்துறைக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாத சூழலில், தாக்குதல் நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எழுப்பினேன்.
அத்துடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்த காரணத்தால், அது நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் பதற்றம் பரவிப் போராட்டம் நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பிராயச்சித்தமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான சிறப்புத் தீர்மானம் ஒன்றை இந்தப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். அத்துடன், வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாறாக, பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த ஊர் உள்ளிட்ட தேவையில்லாத பல விவரங்களைக் கேட்கின்ற என்.பி.ஆர் கணக்கெடுப்பைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என அறிவித்து பிராயச்சித்தம் தேடுங்கள் என வலியுறுத்தினேன். ஆளுந்தரப்பில் முதலமைச்சர் உள்பட யாரும் பதில் சொல்லவில்லை. சபாநாயகரும் அது குறித்து விவாதிக்க அனுமதிக்கவில்லை என்பதால், அடையாள வெளிநடப்பு செய்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பதவி நீக்க நடவடிக்கை குறித்து பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, பேரவைத்தலைவர் தனது கடமைக்குரிய நடுநிலைத் தன்மையைத் தவறவிட்டு, ஆளுந்தரப்புக்கு ஆதரவான முறையிலேயே செயல்படுவதை உணர்ந்து, தி.மு.கழகம் வெளிநடப்பு செய்தது. சட்டரீதியான நடவடிக்கையை, மனசாட்சியுடன் நியாயமாகப் பேரவைத் தலைவர் எடுத்தால், இந்த ஆட்சியின் ஆயுள் பறிபோய்விடும்.
பேரவையில் ஜனநாயக உரிமைகள் முரட்டுத்தனமாக மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்பினைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்புச் செய்வதும், அதுகுறித்து செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கிவிட்டு, மீண்டும் பேரவை அலுவல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளுக்காகத் தவறாமல் குரல் கொடுப்பதும் தி.மு.க.வின் வழக்கம்.
இந்த முறையும் தி.மு.கழகம் அப்படித்தான் செயல்பட்டது. ஆனால், எந்த ஒரு பிரச்னையிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு மக்களைத் திசை திருப்பி, ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறதே தவிர, எதற்கும் முழுமையான தீர்வு காண எந்த வகையிலும் முற்படவில்லை. எதிலும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில்லை. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் குறித்து வலுவான ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் கழக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் எடுத்துரைத்தார். இதுதொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தால், விவாதிப்பதற்கு அனுமதி இல்லை என மறுத்தார்கள்.
அவர்களால் எப்படி விவாதிக்க முடியும்? பிப்ரவரி 20ஆம் நாள் உயர்நீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு மோசடி குறித்த வழக்கின் விசாரணையின்போது மாண்பமை நீதிபதி அவர்கள், “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்”என இந்த ஆட்சியாளர்களுக்கு ‘சான்றிதழ்’ (!) வழங்கியிருக்கிறாரே! அதனால், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து எது பேசினாலும், பேரவையில் அனுமதியில்லை என மறுத்துவிட்டு, தங்களைத் தாங்களே பாராட்டி, மேசையைத் தட்டும் பேச்சுகளுக்கு மட்டும் அதிக நேரம் வழங்கப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் முஸ்லிம்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அதற்கு எதிரான தீர்மானத்தைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தினார். அதைக் கேட்கும்போது, தவறு செய்தவர்களுக்கு எப்படியாவது மறைத்திட வேண்டும் என்ற பதற்றத்தில், கோபம் வரத்தானே செய்யும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படித்தான் பதற்றமும் கோபமும் பொத்துக்கொண்டு வந்தது. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, சொல்லுங்க” என்றார் குரலை உயர்த்தி. பேரவையில், ஆளுங்கட்சியினர்தான் இது பற்றிச் சொல்லவேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினரிடம் பதில் கேட்கும் அதிசயமான, தலைகீழான ஆளுங்கட்சி தமிழ்நாட்டில் உள்ளது.
கோபாவேசத்தால் உண்மைகளை மறைக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்ததுதான். முஸ்லிம்கள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை தி.மு.கழகம் மட்டுமல்ல, பா.ஜ.கவின் ஆதரவுக் கட்சிகளே வலியுறுத்துகின்றன. அடிமைக் கட்சியான அ.தி.மு.க மட்டும்தான் தனது தவறை மறைத்து நியாயப்படுத்த, அநியாயமான முறையில், மண்டபம் அதிரப் பேசிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது சாத்தியமில்லை என்பதை நாம் மட்டுமல்ல, மத்திய இணையமைச்சரே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டார். தமிழக அமைச்சர் திரும்பத் திரும்ப இரட்டைக் குடியுரிமை எனப் பொய்யான- அரசியல் சட்டத்திற்கு மாறான- மோசடியான வாக்குறுதி அளிப்பதால் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அண்ணன் துரைமுருகன். அதனையும் பேரவைத் தலைவர் ஏற்கவில்லை.
பிப்ரவரி 20ஆம் நாள் பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்தபோது, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது நமது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அந்த ஒரு காரணமே இந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு போதுமானதாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது இரண்டாவது காரணமாக இருக்கிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்.பி.ஆர் தயாரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள புதிய படிவத்தில் பெற்றோரின் பிறந்த தேதி, ஊர் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
உரிய சான்றிதழ் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடும் பண்டிகைக் காலங்கள் குறித்து கேட்கப்படுகிறது. அந்தப் பண்டிகைப் பட்டியலில் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் இடம்பெறவில்லை. இதுவே மதரீதியான பிரிவை-பிளவை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவல்களைத் தராதவர்களை ‘D’ என்று சந்தேகத்திற்குரியவர்களாக குறிப்பிட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தேசியக் குடியுரிமைப் பதிவேடு-என்.ஆர்.சி. ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான அனைத்துத் தகவல்களும் இந்த என்.பி.ஆரில் கேட்கப்படுகின்றன”என்பதை எடுத்துக்காட்டி, ஒட்டுமொத்தப் பாதிப்பினைச் சுட்டிக்காட்டியபோதும், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடக்காது என்ற உறுதிமொழியை வழங்கிட ஆட்சியாளர்கள் தயாராகவே இல்லை; காரணம் டெல்லி பாதுஷாக்களிடம் உள்ள பயம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்பதையும் பேரவையில் எடுத்துரைத்தேன். ஆளுநருக்குள்ள அதிகாரம் குறித்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்திருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், ஆளுநர் ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை என அவரிடம் கேட்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அது பற்றி இந்த அரசு கேள்வி எழுப்பியதா? ஆளுநரை வலியுறுத்தும் சூழலில் இருக்கிறீர்களா?” எனக் கேட்டேன். 7 பேர் விடுதலையில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை துளியும் இல்லை என்பதைத்தான் ஆட்சியாளர்களின் பதில்களும் செயல்பாடுகளும் காட்டுகின்றன.
பிப்ரவரி 20ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயுள்சிறைவாசி நளினி அவர்களின் மனு மீதான விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்வரை, மாநில அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்திற்கு சமமானது. அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பில்லை” எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, 7 பேர் விடுதலையில் சட்டத்தின் சாதகபாதகங்களை வைத்து மத்திய-மாநில அரசுகள் விளையாடிக்கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது; அமைச்சரவைக்குள்ள மரியாதையும் அந்தரத்தில் தொங்குகிறது.
நான்காண்டு காலமாக விவசாயப் பெருங்குடி மக்களை-உழவர் பெருமக்களை பட்டினிச்சாவுக்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட்ட அ.தி.மு.க அரசு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் சந்தித்த படுதோல்வியினாலும், சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டும், திடீரென பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அரைகுறை அறிவிப்பை அவசரமாக வெளியிட்டது. வழக்கம்போல, ஆளுந்தரப்புக்கு வேண்டிய சிலர் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தாலும், பெரும்பாலான விவசாய அமைப்பினரும் இயற்கை ஆர்வலர்களும், சட்டம் கொண்டு வந்ததற்குத் தங்கள் வரவேற்பைத் தெரிவித்த அதே நேரத்தில், இதன் சாத்தியக்கூறு குறித்த சந்தேகங்களையும், மசோதாவில் உள்ள ஓட்டைகளையும் பட்டியலிட்டிருந்தனர். வெறும் அறிவிப்புகளால் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பதையும், உரிய முறையில் ஆலோசித்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும் என்ற ஆழ்ந்த அக்கறையுடன், முழுமையான அளவில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, காவிரி டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, வேளாண் மண்டலமாக்குவதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தி.மு.கவும் வரவேற்கிறது. ஆனால், அ.தி.மு.க. அரசு அரைக் கிணறு தாண்ட நினைத்து, அதுவும் அவசர அவசரமாகத் தாண்ட நினைத்து, வாக்கு அரசியலை மனதில் வைத்து, செயல்படுவதைத் தொடக்கம் முதலே கழகம் சுட்டிக்காட்டி வருகிறது.
பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அது எங்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக இத்தகைய தீர்மானங்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்தே அதன்பிறகு உரிய திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றுவது வழக்கம். அதனைப் பேரவையில் வலியுறுத்தினேன். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அண்ணன் துரைமுருகனும், இந்தத் தீர்மானம் உண்மையாகவே பயன் தரும் வகையில் அமைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனைகளை எடுத்துரைத்தார். ஆளுந்தரப்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் இதில் குறைகள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டார்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்யாமல், திருச்சி-கரூர்-அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்காமல், ரியல் எஸ்டேட் போன்ற மனை விற்பனைக்கான வரைமுறைகளை வகுக்காமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட கடிதத்திற்கான பதில் என்ன என்பதை விளக்காமல், அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக –அலங்கோலமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி, முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினேன்.
விவசாயி போல ஒப்பனை மட்டுமே போட்டுக்கொள்ளும் முதல்வரின் தலைமையிலான அரசு அதனை ஏற்காத காரணத்தால், பேரவையிலிருந்து அடையாள வெளிநடப்புச் செய்தோம். ஆனால், ஊடகங்களில்-நாளேடுகளில் எடப்பாடி பழனிசாமி அரசு முழுமையான வேளாண் மண்டலத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட்டது போலவும், தி.மு.க. அதனை ஏற்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது போலவும் தலைப்புச் செய்தி போட்டு, எதற்கோ விசுவாசம் காட்டுகிறார்கள்.
வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பின் நிலை என்ன, பலன் என்ன என்பதை தி.மு.க மட்டுமல்ல, தோழமைக் கட்சியினரும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். காவிரிப் பாசன விவசாய அமைப்பினரும், பூவுலகின் நண்பர்கள் போன்ற இயற்கை ஆர்வலர்களும் இந்தத் தீர்மானம் முழுமையானதல்ல, வெறும் கானல் நீர் என்பதையும், மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்-கடலோரப்பகுதித் திட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது; பயன் தராது என்பதையும் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். இதுதான் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் உண்மையான நிர்வாகத் திறன்(!).
5 நாட்கள் நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட - மேற்கொள்ளப்பட்ட அனைத்துமே மக்கள் மீது அக்கறையற்ற - மாநில அதிகாரங்களை அடமானம் வைக்கிற செயல்பாடுகள்தான். மத்திய அரசின் தயவில், பா.ஜ.கவின் கண்ணசைவில், ஆட்சி நடக்கின்ற காரணத்தால், மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை வெளிப்படுத்தும் வகையில் கழக உறுப்பினர்கள் பேரவையில் குரல் எழுப்பினார்கள். குறிப்பாக, இந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் கழக உறுப்பினர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுதர்சனம், மனோ தங்கராஜ், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் எழுப்பிய பிரச்னைகளுக்கு உரிய பதில் எதையும் ஆளுந்தரப்பு வழங்கவில்லை. கழகத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எடுத்துரைத்து மக்கள் பணியாற்றினார்கள்.
மக்கள் நலனில் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தாய்மொழி நாளையொட்டி முதல்வர் விடுத்த அறிக்கையில், ‘விழிபோல எண்ணி நம் மொழிகாக்க வேண்டும்’ என எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படப் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில்தான், ‘ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ஏமாறாதே.. ” என்ற பாடல் வரியும், “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடல்வரிகளும் உள்ளன. மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் இந்த அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது! மக்கள்தான் மகேசர்கள்; எதையும் மறந்து விடவும் மாட்டார்கள்; ஏமாற்றுவோரை, நிச்சயம் மாற்றுவார்கள்; வெளியேற்றுவார்கள்.”
உங்களில் ஒருவன்,
மு.க.ஸ்டாலின்
இவ்வாறு அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.