தி.மு.க பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் (98) உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர்பிரிந்தது.
தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பேராசிரியரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வந்தார்.
இந்நிலையில், பேராசிரியர் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பேராசிரியர் உயிர்பிரிந்தது. இதனை மருத்துவனை நிர்வாகம் உறுதி செய்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவருடன் தி.மு.க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
மருத்துவமனையில் பேராசிரியர் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
மேலும், செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, பேராசிரியர் மறைவையொட்டி, தி.மு.க கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற தோழராகவும், 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகநலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றுமத் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும், தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாட்கள் உடல் நலிவுற்றிறிருந்து இன்று அதிகாலை (07/03/2020) சுமார் 1 மணியளவில் மறைவெய்தியதையொட்டி கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதோடு, கழகக் கொடிகள் 7 நாட்களும் அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.