பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி கேட்டு துயருற்றேன். என்னுடைய சமகால அரசியல் தலைவரான அவரை, 1945ம் ஆண்டிலிருந்து நன்கு அறிவேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் அவர் நீண்ட காலம் பணிபுரிந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற காலத்திலிருந்து, அண்ணா, கலைஞர் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப் பெருந்தலைவராக, வரலாறாக விளங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு, திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டிலிருந்து, அதற்கு முன்பிருந்து நடத்திய பல பேச்சுவார்த்தைகளில், தொகுதி உடன்பாடுகளை ஏற்படுத்துவதில் பேராசிரியர் அன்பழகன் மிக முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளார். மிகுந்த நிதானமாக, ஆய்ந்து தன்னுடைய அபிப்ராயங்களை மெதுவாகவும், அன்பாகவும் சொல்லக்கூடிய திறமையைப் பெற்றிருந்தார்.
தமிழக சட்டசபையில் அவருடன் பணியாற்றிய காலத்திலிருந்து அவரைச் சந்திக்கும்போதெல்லாம், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தவர். அவர் விட்டுச் சென்ற பணிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வழிகாட்டுதலின் பேரில் திராவிட முன்னேற்றக் கழகம் செய்து முடிக்கும்.
பேராசிரியர் அன்பழகன் அவர்களை கடைசியாக சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய ஒரு விழாவில் சந்தித்துப் பேசினேன். அன்றைய நிகழ்வில் அவர் தனது கருத்துகளை கூறும்போதும், என்னுடைய பணிகளை கூறும்போதும் மிகுந்த ஆவேசத்தோடு பேசினார். என்னுடைய ஆரோக்கியத்தை நன்கு பார்த்துக்கொள்ளும்படி அடிக்கடி கூறுவார். அவருடைய மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் ஈடுகட்டமுடியாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து வாடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், உறுப்பினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.