குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்களும், CAA-வுக்கு ஆதரவாக பா.ஜ.கவினரும் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் வண்ணாரப்பேட்டை பகுதியில் பல நாட்களாக இஸ்லாமிய பெண்கள் போராடி வருகின்றனர். அதுபோல, கடலூர், திருப்பூர் என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமிய பெண்கள் தலைமைதாங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரில் நடைபெறும் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கவும், போராட்டக்காரர்களை கைது செய்யவும் கோரி கோபிநாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணன் மற்றும் சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்குப்பதிவு செய்த பிறகும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாது ஏன் என காவல்துறையிடம் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து அறிந்த திருப்பூர் போராட்டக்காரர்கள், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் 20 நாட்களாக போராடி வரும் சூழலில் எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மன வேதனையை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், கைது செய்வதென்றால் செய்துகொள்ளுங்கள். ஆனால் அப்படி கைது செய்யப்பட்ட எங்களை சிறையில் அடையுங்கள். எப்போது வெளியே வந்தாலும் எங்களது போராட்டத்தைத் தொடருவோம் எனத் தெரிவித்துள்ளனர்.