டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின்போது இஸ்லாமியர்களின் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது கடந்த வாரம் 23, 24ம் தேதிகளில் நடந்த இந்த வன்முறை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ, அமைச்சர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதே டெல்லியில் நடந்த கலவரத்துக்குக் காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்துத்வா கும்பலால் நடத்தப்பட்ட இந்த வன்முறையால் இதுவரையில் 40க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
வன்முறையின் போது இஸ்லாமியர்கள் பலரையும் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லியும், தேசிய கீதம் பாடச்சொல்லியும் கொடுமை செய்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதைக் காண முடியும். இதற்கு டெல்லி போலிஸாரும் உடந்தையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை ஆட்சியாளர்களாலும், மதவாத சக்திகளாலும் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் நடத்திய கள ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும், வன்முறையில் ஈடுபட்ட இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர்களிடமும் சென்று பிபிசி நிறுவனம் செய்தி சேகரித்துள்ளது.
அதில், ஹிமான்ஷு ரத்தோர் என்ற இந்துத்வ கும்பலைச் சேர்ந்த நபரிடம் வன்முறை தொடர்பாக கேட்டபோது, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு டெல்லி போலிஸாரே உதவியதாகக் கூறியுள்ளார்.
மேலும், முஸ்லிம்கள் மீது கற்களை வீசியபோது, எங்களிடம் போதுமான கற்கள் இல்லாதபோது, டெல்லி போலிஸாரே கற்களை எடுத்து தங்களிடம் கொடுத்து வீசச் சொல்லினார்கள் என ஹிமான்ஷு கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.