சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பீரங்கி தயாரிக்கும் ஹெச்.வி.எஃப் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
கடும் பாதுகாப்போடு செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலையில் இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இராணுவ வீரர்களில் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர் 48 வயதான கிரீஜேஷ்குமார் என்றும் இமாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரைச் சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் திரிபுராவைச் சேர்ந்த நிலாம்பசின்ஹா என்றும் தெரியவந்துள்ளது.
இந்தப் பாதுகாப்பு பணிக்காக மேகலாயாவில் விமானப் படையில் பணியாற்றிய நிலாம்பசின்ஹா 3 நாட்களுக்கு முன்புதான் சென்னை ஆவடிக்கு வந்துள்ளார். பணியில் சேருவதற்காக நேற்று நிலாம்பசின்ஹா கிளம்பியுள்ளார்.
பணியில் ஈடுபட்ட நிலாம்பசின்ஹாவை மாற்றிவிட அடுத்த பாதுகாப்பு வீரர் வரத் தாமதமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த நிலாம்பசின்ஹா பாதுகாப்புப் படைவீரர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த அறையை நோக்கி 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது இருட்டு அறையில் 4 இராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு திடீரென எழுந்துள்ளனர். அப்போது தாக்குதல் நடத்துவது யார் எனப் பார்க்க அறையில் இருந்து வெளிவர முயற்சித்த கிரீஜேஷ் மீது குண்டுகள் பாய்ந்துள்ளன.
வலியால் அலறிய கிரீஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அமைதியாக இருக்கையில் அமர்ந்த நிலாம்பசின்ஹாவை பின்வழியாக வந்த சக இராணுவ வீரர்கள் பிடித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலியான கிரீஜேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலாம்பசின்ஹாவை போலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இராணுவ வீரரின் சடலத்தை மீட்ட போலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் சக இராணுவ வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.