ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது பெரும் பதற்றம் நிலவியது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்கோட் வரை பேரணியாக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சென்றனர். அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களை நோக்கிச் சுட்டார்.
இதில் சதாப் பரூக் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை தடுக்காமல் டெல்லி போலிஸார் வேடிக்கை பார்த்ததாகக் கூறி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி பழைய காவல்த்துறை தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு முதல் நடைபெற்றுவந்த போராட்டம் மீண்டும் காலையில் தொடர்ந்தது. அதிகமான மாணவர்கள் கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலிஸார் கலைக்க முயற்சித்தனர். அப்போது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து கலைய மறுத்த மாணவர்கள் சிலரை போலிஸார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றும், தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். இதில் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.