குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாகச் சென்றனர். அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த இந்துத்துவா மதவெறியன் ஒருவன், திடீரென மாணவர்களை நோக்கிச் சுட்டான்.
இதில், சதாப் பரூக் என்ற மாணவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய ராம்பக்த் கோபாலை டெல்லி போலிஸார் கைது செய்தனர். அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மாணவர்களைப் பார்த்துச் சுடும்போது, “இதுதான் உங்களுக்கு விடுதலை” (“யே லோ ஆசாதி”) என்று கத்திக்கொண்டே சுட்டிருக்கிறான். போலிஸார் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தும் அதைப்பற்றியெல்லாம் அவன் சிறிதும் கவலைப்படாமல் மாணவர்களைப் பார்த்துத் துப்பாக்கியால் குறி வைத்துச் சுட்ட சம்பவத்தால் பல்கலைக்கழக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை தடுக்காமல் டெல்லி போலிஸ் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகக் கூறி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி பழைய காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு நடைபெற்ற போராட்டம் தற்போது வரை நடந்துவருகிறது.