குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் பேரணி நடக்கிறது. இந்தப் பேரணியில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், மாணவர்கள் என பல்வேறு அமைப்பைச் சார்ந்த ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பேரணிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க நடத்தும் பேரணிக்குத் தடைவிதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “எப்படியாவது இந்த பேரணியை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று திட்டமிட்டு அவசர அவசரமாக நீதிபதியின் வீட்டிற்கே சென்று தடுப்பதற்கான முயற்சியில் ஆளுங்கட்சியினர் சிலர் ஈடுபட்டார்கள். எங்களுக்கு நீதிபதிகளிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால் நாங்கள் அங்கு செல்லவில்லை.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகிறோம். பேரணிக்கு ஆளுங்கட்சி மிகப்பெரிய விளம்பரத்தை செய்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு, விதிகளின்படி, சட்டத்திற்குட்பட்டு, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் பெரிய அளவில் பேரணியை நடத்த உள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.