மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்ற சார்ட்டர்டு நீதிமன்றங்களான பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை. மேலும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதே கூட்டத்தின் போது, ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக மூன்று நீதிபதிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. அதேபோல, திறமையின்மை காரணமாக எட்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நீதிபதிகளுக்கு ஐந்து முறை ஊதிய உயர்வு ரத்து செய்தும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், நாமக்கல் மாவட்ட முன்னாள் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்தவும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.