தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுவர் இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டையில் இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை கொட்டும் மழையில் நேரில் சந்தித்த தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்கினார்.
தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க., முன்னணி செயல்வீரர்கள் உடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.