“அனைத்துத் தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போன துயரமும் அதிர்ச்சியுமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், அச்சம் ஏற்படுகிறது.
வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக, உரிய பருவத்தில் பெய்யக்கூடிய மழை இது என்பதால், அதனை உணர்ந்து முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக உருக்குலைந்து கிடப்பதால், இந்தப் பருவ மழைக்கே கடலூர் உள்பட பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடலூரில் 3000த்துக்கும் அதிகமான வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கடும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். அதுபோலவே, விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள். வாய்க்கால், ஓடை போன்றவை சரியாகத் தூர்வாரப்படாததால் இந்த நிலைமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழையின் காரணமாக குழந்தைகள் - முதியோர் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அரசு மருத்துவமனைகள் உரிய வசதிகளுடன் தயாராக இருந்திட வேண்டும். ஆனால், பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்து, அங்கே சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கவனக்குறைவும் அலட்சியமும் நீடித்தால், 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட செயற்கைப் பெருவெள்ளத்தைப் போன்ற சூழலைத் தமிழகம் சந்திக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும். அந்த நிலை இனி ஒருக்காலத்திலும் உருவாகிவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் செயல்பட வேண்டியதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.
நேற்றும் இதுகுறித்து தெரிவித்திருந்தேன். மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
அதுபோலவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் விரைந்து செயல்படவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.