தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் அடுத்த 24 மணிநேரத்திற்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றார்.
அதேச்சமயம் மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.