சுஜித்தின் மரணம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் சூழலில், சுஜித்தின் மீட்புப் பணியும் பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது.
யாருடைய குற்றம்? ஏன் இத்தனை தாமதம்? என்ன அறிவியல் பார்வையை அரசு கொண்டிருக்கிறது? ஆழ்துளை கிணறு மூடப்படுவது யாருடைய பொறுப்பு? ஆழ்துளை கிணறு மூடப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டியது சாமானியர்களா, அரசா? என நிறைய கேள்விகள்.
கடந்த நான்கு நாட்களாக நாம் அனைவரும் கொண்டிருந்த பதற்றத்தின் அடிநாதமாக அரசின் மீதான அவநம்பிக்கை இருக்கிறது. நாம் அன்றாடம் அணுகும் அரசதிகாரங்கள் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் ஆர்ப்பாட்டமாக ராட்சத உருவத்தில் நின்று சாமானியனை அச்சுறுத்தும் நிலையே இருக்கிறது.
ஓர் அசுர வலைப்பின்னலில் கோரப்பற்களுடன் விழிப்பிதுங்க முறைக்கும் அரச இயந்திரம் எந்த வகையில் சாமானியன் அணுகும் விதத்தில் இருக்கிறது என்ற கேள்வியிலிருந்தே சாமானியன் கொண்டிருக்கும் பொறுப்புணர்வை பற்றிய கேள்விகளும் தொடங்கப்பட வேண்டும்.
முன்பொரு முறை கருவேல மரங்களை அகற்ற சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு தடையாக இருந்தது அரசின் முறைமைகள்தாம். ‘அவரிடம் அனுமதி வாங்கு, இங்கே கையெழுத்து வாங்கு, அவரை கவனி’ என பல கெடுபிடிகளுக்குள் ஒரு சாமானியனை அலைக்கழித்து அவனின் எண்ணத்தையே குழி தோண்டி புதைக்க வைத்துவிடும்.
உதாரணமாக எங்கள் வீட்டுக்கு பின்னால் ஓர் உறைகிணறு சில காலமாக இருக்கிறது. வீட்டுக்கு பின்னாலிருக்கும் மனையின் உரிமையாளரென எவர் வந்தும் பார்த்தது கிடையாது. காம்பவுண்டு ஏதும் கட்டப்படாமல் திறந்த வெளி. ஆரம்பத்தில் கிணறு மூடப்பட்டிருந்தது. எவரோ சிலரின் மது விருப்பத்துக்கு பிற்பாடு மூடி பெயர்க்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்த நாயின் ஓலமே அங்கு கிணறு இருப்பதை ஊருக்கு அறிவித்தது.
ஊரின் பிரசிடெண்ட்டை அணுகுவோமென பார்த்தால், உள்ளாட்சி தேர்தலே கிணற்றில் விழுந்த நாயாகத்தான் இருக்கிறது. எண்ணி எண்ணி சேமித்து வைக்கக்கூடிய அனுபவங்கள் பலவற்றை அரசு பல தருணங்களில் கொடுத்திருப்பதால், உறைகிணறு விஷயத்தில் என்ன செய்வதென்கிற சிந்தனை பல மாதங்களாகவே மூளைக்குள் ஓடிய எலியாக சுற்றிக் கொண்டிருந்தது. சுஜித் மீண்டும் தலையை தட்டி செயல்பட சொன்னான். அந்த நேரத்தில்தான் எனக்கு ஓர் அமைப்பின் முகநூல் பதிவு கண்ணில்பட்டது.
''தவ்ஹீத் ஜமாஅத்!'' எல்லா பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாது தொடர்ந்து மக்களின் நலனுக்காக உழைத்து வரும் முக்கியமான சமூக அமைப்பு, தவ்ஹீத் ஜமாஅத். 2015ம் ஆண்டின் வெள்ளகாலத்திருந்தே நேரடியாகவும் செய்திகளாகவும் அவர்களின் உழைப்பை பார்த்து வந்திருக்கிறோம். ஆகவே அந்த பதிவிலிருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொள்வது என முடிவெடுத்தோம்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டதும் அழைப்பை ஏற்றவர் திண்டுக்கல்லில் இருந்தார். நிலவரத்தை சொல்லிக் கேட்டதும், அருகே இருக்கும் அமைப்பின் தோழர்களுக்கு தகவல் கொடுப்பதாக சொன்னார்.
பிறகு எங்கள் வேலைகளை பார்க்கத் தொடங்கிவிட்டோம். பெரும்பாலான நேரங்களில் அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரண்டாம் முறை அழைப்பதில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து அழைத்தார்கள். சில மணி நேரங்களிலேயே அழைத்து, முகவரியை பெற்றுக் கொண்டனர்.
பொழுது விடிந்தது. மூன்று பேர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். இடத்தை குறித்துக் கொண்டார்கள். ஒரு ஆட்டோவில் இடத்துக்கு வந்திறங்கி கிணற்றை ஆராய்ந்தார்கள். அளவு குறித்துக் கொண்டார்கள். சென்றார்கள். மீண்டும் வருகையில் ஒரு மூடியை எடுத்து வந்தார்கள். கிணற்றில் வைத்து, காற்று புக ஒரு துளை வைத்து, மூடி பூசினார்கள்.
மறுமூலையில் சுஜித்தை ஒளித்து மறைத்து அரசு புதைத்துக் கொண்டிருந்தது. தவ்ஹீத் ஜமாஅத் தோழர்களுக்கு தேநீர் கொடுத்தோம். அன்புடன் ஏற்றுக் கொண்டனர். அன்பை மட்டுமே எதிர்பார்த்தனர். நன்றி கூறினோம். நன்றி கூறினார்கள். வேறெங்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டுமெனில் அவர்களின் தொடர்பு எண்ணை கொடுக்கச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
உங்களுக்கும் மனதிலோ வெளியிலோ ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் ஆபத்தான சூழலில் இருந்தால், உடனே தவ்ஹீத் ஜமாத்தை தொடர்பு கொள்ளுங்கள். தோழர்கள் அரசை போலில்லாமல் மனமுவந்து முழு அன்புடன் உதவுகிறார்கள். அரசு தன் கடமையாகச் செய்ய வேண்டியதை, எங்கோ ஒரு சில நல்லுள்ளங்கள் அமைப்பாய் சேர்ந்து மக்களுக்கென செய்து கொண்டிருக்கிறார்கள்.
- ராஜசங்கீதன்