நாமக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நீட் பயிற்சி மையங்கள், கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல், கரூர், சென்னை என தமிழகத்தில் மொத்தம் 17 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தையும், அசையா சொத்துக்களின் ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், நீட் தேர்வில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த தகவல் வெளியானது. தற்போது இந்த சோதனை சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்செயல்களின் மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்துள்ளது.
இந்நிலையில், ’நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன’” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி பயில ஆர்வமுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுகின்றனர்.
பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியும் என்பதை வருமான வரி சோதனை நிரூபித்துள்ளது. நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை, இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.