இந்தியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது கண்டாங்கி சேலை. கண்டாங்கி சேலைகளைப் பற்றி கவிதைகளும், சினிமா பாடல்களும் வெகுபிரபலம். கண்டாங்கி சேலை ஏன் பிரசித்தம் பெற்றது என்பதற்கு அதன் தனித்தன்மையே காரணமாக இருக்கிறது.
கண்டாங்கி (Kandangi)சேலைக்கு தற்போது வயது 300. ஆம், தமிழகத்தின் செட்டிநாடு எனப்படும் நகரத்தாரின் காரைக்குடி இதன் பிறப்பிடம். பழமையான பட்டு நூலினால் நெய்யப்படுவதே இதன் தனிச்சிறப்பு.
கண்டாங்கி சேலைகள் இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், நகரத்தார் மூலம், பல நாடுகளில் பிரபலமானது. 48 அங்குலம் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது இந்த சேலை, பாரம்பரிய பெருமையை பறைசாற்றி வருகிறது.
நல்ல அடர்த்தியான மாறுபட்ட வண்ணங்களின் கலவையாக தயாரிக்கப்படும் இச்சேலைகள் கட்டம் போட்டது என்பது மாறி கோடுகள், பெரிய கட்டம், பூக்கள் கொண்ட நடுப்பகுதியுடன் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டும் வருகிறது.
இந்த கண்டாங்கி சேலையின் சிறப்பே இரண்டு பக்க பெரிய பார்டர்கள் தான். அதனை ‘கண்டாங்கி பார்டர்’ என்றழைப்பர். கெண்டக் கால் பகுதியில் பளபளப்பு சரிகை பார்டர் தனிஅழகை ஏற்படுத்துவதால், கெண்ட அங்கி என்று அழைத்து அதுதான் கண்டாங்கி என்று மருவியதாகவும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, ரசாயன கலவை இன்றி இந்த கண்டாங்கி சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விரும்பும் தன்னிகரில்லா சேலையாக கண்டாங்கி விளங்கி வருகிறது.
கண்டாங்கி சேலையின் முக்கிய சிறப்பு அதன் பார்டர்களைப் போல வண்ணங்களும், வடிவமைக்கப்பட்ட டிசைன்களும்தான். பட்டாம்பூச்சி, அன்னப்பறவை, வைரம், செடி, கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், தாமரைப்பூ, யானை, மயில் என ஏகப்பட்ட ஓவியங்கள் கண்டாங்கி சேலைகளில் அணிவகுத்து வரும். ஆயிரம் ரூபாயில் தொடங்கி இவை விற்பனை செய்யப்படுகின்றன.
நயன்தாரா முதல் நாற்றுநடும் கிராமத்து மூதாட்டிவரை கண்டாங்கி கட்டிக்கொண்டால் கண்கொள்ள காட்சியாக இருக்கும். அதிலும், பச்சை, நீலம், பிரவுன், மாம்பழ மஞ்சள், சிகப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் அகலமான சரிகை பார்டர் வைத்த இந்த புடவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவை.
இத்தகைய சிறப்புவாய்ந்த கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பட்டு கூட்டுறவு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கி சிறப்பித்துள்ளது.