சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்பகுதியில் கடல் அலைகள் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இதனைக் காண பெரும் மக்கள் கூட்டம் கூடியது.
ஆனால், எதனால் இதுபோன்று அலைகள் உருவானது என்கிற சந்தேகம் எழுந்தது. இதற்கு கடல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, கடலில் மேற்பரப்பில் அலைகள் அவ்வப்போது இதுபோன்று ஒளிர்வது வழக்கம்.
இதற்கு உயிரொளிர்வு (Bio luminescence) என்கிற தன்மைதான் காரணம். கடலில் இருக்கும் டைனோஃப்ளாஜெலேட்ஸ் (Dinoflagellates) என்கிற பாசி வகை மீன்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவே இதுபோன்ற ஒளிகளை உமிழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை கொண்ட இந்த பாசிகள் அதிகமாக ஒளிர்ந்தால் அவற்றால் ஆபத்து ஏற்படக்கூடும். இதுபோன்ற சமயங்களில் கடலில் இறங்கி குளிப்பதையும் தவிர்க்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக முகநூலில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
அதில், சென்னை கடலில் ஏற்பட்ட உயிரொளிர்வு குறித்து பெசன்ட் நகரில் உள்ள ஊருர் குப்பத்தைச் சேர்ந்த மூத்த மீனவர் ஒருவரிடம் நித்யானந்த் ஜெயராமன் கேட்டுத் தெரிந்துக் கொண்டதை பதிவிட்டுள்ளார்.
வண்டத்தண்ணி என்கிற கலங்கலான தண்ணீரில் மாசு கலைந்து செல்லும் போது இதுபோன்று நிகழ்வதை காணலாம். இதை ‘கமரு’ என அழைப்போம் என மூத்த மீனவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற பாசிகள் கடலில் எப்போதும் இருந்தாலும் அவை அதிகமாகும் போது மட்டுமே இவ்வாறு மிளிரும் என குறிப்பிட்டுள்ளார்.
சிறிய அளவிலான பாசிகளே நேற்று சென்னை கடற்கரைகளில் மின்னியதால் பெரிதளவில் கவலையுறத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.