நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள தி.மு.க முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடுபுகுந்து அவரையும், அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் நேற்று மாலை 6 மணியளவில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சியாக இருந்த நெல்லை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் 1996ம் ஆண்டு முதல் பெண் மேயராக தி.மு.கவின் உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், சாலை விபத்தில் தனது மகன் உயிரிழந்த பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார் உமா மகேஸ்வரி.
நெடுஞ்சாலைத்துறை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற தனது கணவர் முருகசங்கரனுடனும், கல்லூரி பேராசிரியராக உள்ள மகள் கார்த்திகாவுடனும் நெல்லையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார் உமா மகேஸ்வரி. மற்றொரு மகள் ப்ரியா திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கல்லூரி முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிய கார்த்திகாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. என்னவெனில், ஹாலில் தனது தாய் உமா மகேஸ்வரி, படுக்கையறையில் தந்தை முருகசங்கரன், சமயலறையில் பணிப்பெண் மாரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. ஆதாய கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டதில், கொலை நடந்த அன்று, உமா மகேஸ்வரி அணிந்திருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், வீட்டில் உள்ள பீரோ திறந்தே கிடந்ததாகவும், அதிலிருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால் இது திட்டமிட்ட கொலையா அல்லது நகை, பணத்திற்காக கொள்ளையர்கள் செய்த கொலையா என்கிற கோணங்களில் விசாரிப்பதற்காக நெல்லை மாவட்ட காவல் ஆணையர் 3 தனிப்படையை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.
முன்னதாக, உமா மகேஸ்வரி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.