சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமணி என்பவர், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்காக தொடர்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமலும், அதேபோல் அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வந்த 903 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விளக்கம் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கமளித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.