வங்கக்கடலில் உருவான ஃபனி புயலின் நகர்வுகள் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “ஃபனி புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,050 கி.மீ தொலைவில் வந்து கொண்டுள்ளது. இன்று இரவுக்குள் தீவிர புயலாகவும் நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். வரும் 1-ம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பின்னர் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து செல்லும்.
300 கி.மீ வரை வட தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரைகளில் புயல் கரையை ஒட்டி வரும்போது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை 29-ம் தேதி முதல் 30 மற்றும் மே1-ம் தேதி வரை தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.