நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரைச் சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது,
“நடந்து முடிந்த மக்களவை & 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க தலைவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
மே 19-ல் நடைபெற இருக்கும் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வி.சி.க ஆதரவு அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம்.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலுமே அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அரியலூரில் பொன்பரப்பி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி இந்து முன்னணி கட்சியினருடன் கூட்டு வைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
வி.சி.க-வின் பானை சின்னத்திற்கு வாக்களித்த காரணத்தால் பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தி, தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இவை அனைத்து காவல்துறையினரின் முன்னிலையிலேயே அரங்கேறியிருப்பது வேதனைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து வருகிற ஏப்.,24-ம் தேதி அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார்.
இதனையடுத்து, பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.