வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாக கூறி வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த முயற்சிகள் காரணமாக இந்த போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்தது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் காரணமாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் கட்சியியான அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மொர்டாசாவின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
அதே நேரம் மொர்டாசாவின் வீடு தீ எரியும் புகைப்படத்தை பதிவிட்ட சிலர் அந்த வீடு வங்கதேச கிரிக்கெட் வீரரான லிட்டன் தாஸுடையது என தவறாக பரப்பினர். இந்த நிலையில், வங்கதேச போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என லிட்டன் தாஸ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், " கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடு எரிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வந்தது. இந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது என்பது தெரிவித்துக்கொள்கிறேன். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுடைய தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. என்னை குறித்து வெளியான செய்தி எல்லாம் வதந்தி தான். அதை யாரும் நம்ப வேண்டாம்.
என்னுடைய நாட்டிற்கு நான் நன்றியுள்ளனாக இருக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எல்லாவித வன்முறைகளையும் விலக்கி ஒற்றுமையாக வாழ்வோம் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது நாம் ஒன்றாக இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அதில் மட்டும் கவனத்தை செலுத்துவோம்" என்று கூறியுள்ளார்.