விளையாட்டு

சாதிப்பார்களா தமிழர்கள் ? - ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே !

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்கள் குறித்த விவரம்.

சாதிப்பார்களா தமிழர்கள் ? - ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ஆம் தேதி முதல் களைகட்டுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் விளையாடும் நிலையில், இந்தியாவிலிருந்து 113 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் பாரிஸ்க்கு பதக்கத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாய்மரபடகுப்போட்டி என 5 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க 11 தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டிலிருந்து துப்பாக்கிச் சுடும் பிரிவில் விளையாட தேர்வாகியுள்ளார் பிரித்விராஜ் தொண்டைமான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ட்ரேப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றதால் ஒலிம்பிக் பதக்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒலிம்பிக் தொடர் டென்னிஸ் களத்தில் தரவரிசை அடிப்படையில் ரோஹன் போபண்ணா தகுதி பெற்றநிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் அவருடன் இணைந்து விளையாட தமிழ்நாட்டைச்சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி தேர்வாகியுள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடிய அனுபவம் ஸ்ரீராம் பாலாஜிக்கு இருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் களம் காண்கிறார்.

சாதிப்பார்களா தமிழர்கள் ? - ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே !

தேசிய போட்டியில் 10முறை சாம்பியன், ஆசியப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலம் வென்று கொடுத்த சரத் கமல், ஒலிம்பிக்கிலும் பதக்கத்தை எதிர்நோக்கியுள்ளார்.

சரத் கமலுடன் இணைந்து மாற்று வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் களம் காண்கிறார். சத்யன் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவிற்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழர்களில் பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணனும் கவனிக்கத்தக்க வீராங்கனையாக தடம்பதித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணன், தகுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, பாரிஸ் ஒலிம்பிக் டிக்கெட்டை புக் செய்தார்.மேலும், பாய்மரப் படகுப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

தடகளத்தை பொறுத்தவரை ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டிலிருந்து தடகளத்தில் மட்டும் ஆறு வீரர்கள் தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஐந்து வீரர்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது.

400 மீ தொடர் ஓட்டத்திலிருந்து மட்டும் நான்கு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர்.

ஆடவர் 400 மீ தொடர் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ் மற்றும் சந்தோஷ் குமார் தமிழரசன் தகுதி பெற்றுள்ளனர்.

உலக தடகள ரிலே போட்டியில் இந்திய ஆடவர் அணி 3 நிமிடம் 3.23 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாமிடம் பிடித்ததுடன் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தனர்.

(ராஜேஷ் ரமேஷ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியின் 400மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல்வேறு தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார் ராஜேஷ். )

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மற்றொரு தமிழ்நாடு வீரர் ஆரோக்கிய ராஜூ காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக சந்தோஷ் குமார் தமிழரசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடவருக்கு நிகராக மகளிர் அணியும் 400மீ தொடர் ஓட்டத்திற்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்திய மகளிர் அணியினர் ஜமைக்கா வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் 3 நிமிடம் 29.35 வினாடியில் பந்தயதூரத்தை கடந்து இரண்டாமிடம் பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தனர்.

சாதிப்பார்களா தமிழர்கள் ? - ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே !

அந்தவகையில் ஒலிம்பிக் செல்லும் இந்திய மகளிர் அணியில் தமிழ்நாட்டிலிருந்து சுபா வெங்கடேஷன், வித்யா ராமராஜ் இடம் பிடித்துள்ளனர்.

24 வயதான சுபா வெங்கடேஷன் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் என அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக் தகுதி சுற்றுப்போட்டியில் ஆடவர் அணி அமெரிக்க அணிக்கு நிகராகவும், மகளிர் அணி ஜமைக்காவிற்கு நிகராகவும் ஓடியதால் இம்முறை 400மீ தொடர் ஓட்டத்தின் இந்திய அணி இறுதிப்போட்டியில் தனது பெயரை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டத்தில் இந்த நான்கு வீரர்களை தவிர மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்திரவேல் 17.12 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனையுடன் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். மும்முறை தாண்டுதலில் 18.29 மீட்டர் உலக சாதனையாக இருக்கும் நிலையில் அவருடைய தேசிய சாதனையிருந்து சற்று அதிகம் தாண்டினாலே ஏதேனும் ஒரு பதக்கத்தை உறுதி செய்யலாம்.

இதே போல் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 22வயதே ஆன ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடைசி நிமிடத்தில் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். 8.42 மீ நீளம் தாண்டி தேசிய சாதனையை தன் வசம் வைத்துள்ள ஜெஸ்வின், 8.95 மீட்டர் உலக சாதனையாக பதிவாகியுள்ள நிலையில், தனது இயல்பான திறமையை வெளிப்படுத்தினாலே ஜெஸ்வின் ஏதேனும் ஒரு பதக்கத்தை அருவடை செய்யலாம்.

400மீ தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல்லில் 6 தமிழ்நாடு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து அசத்தியுள்ளநிலையில் தடகளத்தில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதற்கு இதுவே சான்றாக அமைந்துள்ளது.

- செய்தியாளர் மீனா.

banner

Related Stories

Related Stories