நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முன்னேறின. வலுவான இரண்டு அணிகள் மோதிய போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது . பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடியது. இறுதி கட்டத்தில் அந்த அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்களே வெற்றிக்கு தேவை பட்டது.
ஆனால் அங்கிருந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி கோப்பையை வென்றபின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோப்பையை தூக்கி உணர்ச்சி மிகுதியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் உலகக் கோப்பையை டிராவிட் கையில் ஏந்திய அந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய அவர், " 2007 உலகக்கோப்பையின் போது டிராவிட் தலைமையிலான இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. அதன் பின்னர் அவர் இந்திய அணியில் கேப்டனாக இல்லாமல், வீரராக மட்டுமே விளையாடினார்.
இந்திய அணி தோல்வியடைந்தால், உடனடியாக ராகுல் டிராவிட் என்ன செய்துகொண்டிருந்தார் என்று அப்போதெல்லாம் கேட்டார்கள். அப்படிப்பட்ட ராகுல் டிராவிட்டை, விராட் கோலி அழைத்து கோப்பையை கொடுத்த தருணம்தான் என்னை பொறுத்தவரை சிறந்த தருணம். உலகக்கோப்பையை கைகளில் ஏந்திக் கொண்டு டிராவிட் கத்தி அழுத அந்த தருணம் உணர்வுபூர்வமானது"என்று கூறியுள்ளார்.