நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. அதில் நீட் தேர்வை ரத்து செய்ய போதுமான தரவுகளும், முகாந்திரமும் இல்லை என்பதால் நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட தீர்ப்பில், "நீட் தேர்வு முறையில் விதிமீறல் நடந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த தேர்வின் புனிதத்தன்மை பாதிப்படைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 2 இடங்களில் நடந்த வினாத்தாள் கசிவால் 155 பேர் பயனடைந்துள்ளனர் என்பது உண்மை. இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களில் வினாதாள் கசிவு முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை 21 வரை நடைபெற்ற விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது;
அதில், பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களில் 155 மாணவர்கள் வினாத்தாள் கசிவால் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது. அதே நேரம் இவரை நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதுமான தரவுகள் இல்லை; அதனை நிரூபிக்கும் வகையிலும் நியாயமான எந்த விஷயமும் இல்லைநீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம்"என்று தீர்ப்பளித்துள்ளனர்.