கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் தேசம் என்று போற்றப்படும் நாடு இங்கிலாந்து. அப்படி கிரிக்கெட்டின் கோவிலாக கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனாக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய பொழுது அவருக்கு, நாம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக வருவோம் என்று தெரியாது.
கடந்த 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் பகுதியின் பர்ன்லியில் பிறந்தவர் ஜேம்ஸ் அண்டர்ஸன். கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாட்டில் பிறந்துவிட்டு கிரிக்கெட்டின் மீது காதல் வரவில்லை என்றால் தான் அதிசயம். இங்கிலாந்தில் பிறந்த பிற குழந்தைகளுக்கு எப்படி கிரிக்கெட்டின் மீது காதல் வந்ததோ அதுபோலவே ஜேம்ஸ் ஆண்டர்ஷனுக்கும் கிரிக்கெட்ட மீது அதிக காதல் வந்தது...
அப்படி கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர் போராட்டங்கள் காரணமாக 2002 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடிய காலகட்டத்தில் உள்ளே நுழைந்து விளையாடிய அவர் தற்போது இந்த காலகட்டத்தில் பிறந்து கிரிக்கெட் விளையாடும் வீரர்களுடன் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
50 ஓவர் போட்டி என்றால் ஒரு நாள், 20 ஓவர் போட்டி என்றால் அதிகபட்சமாக ஏழு மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் டெஸ்ட் போட்டியை விளையாடுவது சாதாரணம் கிடையாது. அப்படி டெஸ்ட் போட்டியின் சிறந்த வீரராக வலம் வந்தவர்தான் ஜேம்ஸ் ஆண்டர்சன். குறிப்பாக 41 வயது வரை ஒருவர் கிரிக்கெட் விளையாடுவது என்பதெல்லாம் வேறு ரகம்தான். டெஸ்ட் போட்டிகளில் 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியிருக்கிறார்.
அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்களின் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளை விளையாடி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் ஆண்டர்சன்தான். 2003ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக தனது முதல் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட்டின் கோவிலாக கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியிருந்த ஆண்டர்சன், தற்போது 41 வயது இளைஞனாக அதே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி, தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றிருக்கிறார்.
- மணிவண்ணன்.