கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.
மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் இறுதி லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா, ரோமானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, துருக்கி, ஜெர்மனி, டென்மார்க், ஜார்ஜியா , பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல் , ஸ்லோவேனியா, போர்த்துக்கல் ஆகிய அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 16 ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் இரு அணிகளிலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.
ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலா முவாணி அடித்த பந்து பெல்ஜியம் தடுப்பாட்ட வீரர் வெர்ட்டோகன் மீது பட்டு சுய கோல் ஆனது. இதற்கு பெல்ஜியம் அணியால் பதில் கோல் அடிக்க முடியாத நிலையில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு சூப்பர் 16 ஆட்டத்தில் போர்த்துக்கல் - ஸ்லோவேனியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 90 நிமிடங்கள் முடிந்தும் இரு அணிகளிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.
கூடுதல் நேரத்தின் 105- வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை கோலாக்க நட்சத்திர வீரர் ரொனால்டோ தவறினார். அப்போது அவர் ஏமாற்றத்தில் மைதானத்தில் கண்ணீர் வடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்கு சென்றது.
இதில் போர்த்துக்கல் கோல் கீப்பர் டயாகோ கோஸ்டா ஸ்லோவேனியா வீரர்களின் மூன்று பெனால்டி வாய்ப்புகளையும் தடுத்தார். அதே நேரம் போர்த்துக்கல் அணியின் 3 வீரர்களும் தங்கள் வாய்ப்பில் கோல் அடித்ததால் போர்த்துக்கல் அணி 3-0 என்ற கணக்கில் ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.