நவீன இந்திய அணியை கட்டமைத்தவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை குறிப்பிடுவார்கள். அவர் கண்டெடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்திய சேவாக், யுவராஜ், தோனி,ஹர்பஜன் போன்ற வீரர்கள்தான் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வைத்தனர்.
அதிலும் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்து என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை சொல்லலாம். விவியன் ரிச்சர்ட் போல ஒரு ஆட்டக்காரர் நமக்கு கிடக்கமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தபோது வந்தவர்தான் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல விறுவிறுப்பாகிய பெருமை சேவாக்குக்கு மட்டுமே உண்டு.
சச்சினுக்கே எட்டாக்கனியாக இருந்த டெஸ்ட் முச்சதத்தை இருமுறை எட்டி முச்சதம் அடித்த முதல் இந்தியவர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பின்னர் இரட்டை சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின்-சேவாக் இணையை கண்டு உலகமே பயந்து நடுங்கிய காலம் ஒன்றும் இருந்தது.
இந்த நிலையில், பந்துவீசியதில் மிகக்கடுமையான வீரர் சேவாக்தான் என்று சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரான முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் நீங்கள் பந்து வீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என மாணவர் ஒருவே கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், "நான் பந்துவீசியதில் கடினமாக வீரர் என்றால் அது இந்திய அணியின் சேவாக்தான்" என்று கூறியுள்ளார். முன்னதாக உலகளவில் நான் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்ள மட்டுமே திணறியதாக வீரேந்திர சேவாக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.