கடந்த 2008ம் ஆண்டு உலகின் பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் சிட்டி அணியை அபுதாபியை சேர்ந்த யுனைடெட் குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்து வாங்கியது. அதோடு நிற்காமல் அந்த அணியில் முக்கிய வீரர்களை வாங்கி தற்போது உலகின் சிறந்த கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் சிட்டி அணி உருவாகியுள்ளது.
யுனைடெட் குழுமம் பின்னர் 'சிட்டி ஃபுட்பால் குரூப்' என்ற குழுமத்தை உருவாக்கி அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், சீனா என பல்வேறு நாடுகளில் கால்பந்து கிளப்களை வாங்கி உலகத்தின் முன்னணி ஃபுட்பால் குரூப்பாக உருவாகியுள்ளது.
சில ஆண்டுகளில் அபுதாபியின் இந்த செயலை புரிந்துகொண்ட பிற பணக்கார வளைகுடா நாடுகளில் விளையாட்டில் அதிக அளவு முதலீடு செய்தன. பிரான்சின் லீக் 1 தொடரில் பங்கேற்கும் PSG அணியை, கத்தாரின் அமீர் ஹமாத் அல் தாமி வாங்கினார். பிரீமியர் லீக் கிளப்பான, நியூகேஸில் யுனைடெட் அணியை சவுதி அரேபிய பொது முதலீட்டு நிதியம் பல மில்லியன் தொகைக்கு கையகப்படுத்தியது.
அதன் உச்சமாக கடந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பையை பாலைவன நாடான கத்தார் நடத்தி உலகையே அதிரவைத்தது. அதற்கு போட்டியாக சவூதி அரேபியா பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம், பல்வேறு ரொனால்டோ, நெய்மார், மானே, பென்சிமா, பிர்மினோ, ரூபன் நெவாஸ் , காண்டே, கூலிபாளி, கேசி, பபோனா, பேபினோ போன்ற கால்பந்து வீரர்கள் சவூதி ப்ரோ லீக்கின் அல்- அக்லி, அல்- இத்திகாட், அல்- ஹிலால், அல்- நாசர் ஆகிய அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மேலும், கத்தார் ஃபார்முலா 1, அபு தாபி கிராண்ட் ப்ரீ, சவுதி அரேபியன் கிராண்ட் ப்ரீ, பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ போன்ற கார் பந்தயங்களும் வளைகுடா நாடுகளில் நடைபெற்றது. 2034 கால்பந்து உலகக் கோப்பையும் சவூதி அரேபியாவில் நடக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாகி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட்டில் பணம்கொழிக்கும் ஐபிஎல் தொடரிலும் சவூதி அரேபியா முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சவூதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் நிறுவனம் 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு ஐபிஎல் தொடரில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சவுதி இளவரசர் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது இது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.