4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி குஜராத் ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், #Sorry_Pakistan என்ற ஹாஸ் டாக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக கட்சி பிரமுகருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் X பக்கத்தில், "பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்ற போது 16 வயதில் நான் எப்படித் துன்புறுத்தப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் நிறத்தில் இருந்து என் மதம், என் நாடு மற்றும் என் கலாச்சாரம் என அனைத்திற்கும் என்னை அவமதித்தனர். இதையெல்லாம் நீங்கள் அனுபவித்தது இல்லை என்றால் தயவு செய்து இது குறித்துப் பேச வேண்டாம்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இவரின் இந்த கருத்துக்கு பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் X பக்கத்தில், "பாகிஸ்தான் மக்கள் நமது வீரர்களைக் கிண்டல் செய்து அவமதித்து இருக்கலாம். ஆனால் அதே மக்கள் நமது கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். கடந்த 2004இல் லாகூரில் மொத்த மைதானமும் தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜிக்காக கோஷமிட்டார்கள். அப்போது நான் அங்கே இருந்தேன்.
இந்தியாவிலும் பாகிஸ்தான் வீரர்களைப் பாராட்டி இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஊரான சென்னையில், 1999-ல் மறக்கமுடியாத டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்குச் சென்னை மக்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். அரசியல், மதம் ஆகியவை கட்டி எழுப்பும் வெறுப்பின் சுவர்களை உடைக்கும் ஒரே விஷயம் விளையாட்டு மட்டுமே" என்று கூறியுள்ளார்.