கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 228 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பின்னர் நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை இழந்தது. இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்த அணியை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சித்தனர்.
மேலும், இந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின்னர் வீரர்களின் ஓய்வறையில் வீரர்களின் கூட்டம் நடைபெற்றபோது, பாபர் அசாமுக்கும், ஷாஹீன் அப்ரிடிக்கும் வாக்குவாதம் ஏற்பதாகவும், அப்போது விக்கெட் கீப்பர் ரிஸ்வான் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி கிரிக்கெட் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் விரிசல் இருப்பதை தாமே பார்த்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின் கான் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "வீரர்கள் சிதறிப் போய் காணப்படுகிறார்கள். இதனை நானே பார்த்தேன். ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி கூட கூட பாபருக்கு ஆலோசனைகள் வழங்க தயங்குகிறார்கள். அவர்கள் வெற்றிக்கு எந்த பரிந்துரையும் வழங்குவது இல்லை. கேப்டன் பாபர் சொல்வதை பின்பற்றுவதற்கு தயாராக இருந்தாலும் அவர்கள் ஆலோசனை கொடுப்பதில்லை. இதனை பார்க்கும்போது அணி எழுச்சிபெறவில்லை என்றே தோன்றுகிறது.
இது அனைத்துக்கும் மேல், இந்தியாவுக்கு எதிரான போட்டியை நினைத்து வீரர்கள் பயப்படுகிறார்கள். உங்களிடம் வெற்றி பெறுவதற்கான பாடி லாங்குவேஜ் கூட தெரியவில்லை. எனவே உடைமாற்றம் அறையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இந்த சூழ்நிலையில் உங்களுக்கிடையே எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை முடித்து முன்னோக்கி செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.