தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.
பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.எனினும் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என நடராஜன் கூறியுள்ளார். கோவையில் ஒரு உணவுக்கடையை திறந்த நடராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடினால் உலக கோப்பை தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் நான் என்னுடைய விளையாட்டை நான் தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறேன்.
இப்போது இருக்கும் இளைஞர்கள் நல்லவிதமாக விளையாடி வருகிறார்கள். சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். தற்போது நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கூட ஏகப்பட்ட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்" என்று கூறினார்.