டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனால் முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடைசி நாளில் 251 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி,இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் பரபரப்பானது.
அதன் பின்னர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நான்காவது போட்டி நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களும், இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடி, 107 ஓவர்களில் 592 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய போது, அடிக்கடி மழை பெய்து ஆட்டம் தடைபட்டது.
அதிலும் நான்காம் நாள் வெறும் 30 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. ஆனாலும், ஆஸ்திரேலியா 214-5 என இங்கிலாந்தை விட 61 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனால் இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றால் ஆஸ்திரேலியா தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகவும் மழை மட்டுமே அந்த அணியை காப்பாற்றும் என்றும் கூறப்பட்டது.
அதன்படி இறுதி நாள் முழுக்க மழை பெய்த காரணத்தால் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆஷஸ் தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கும் நிலையில் அதை இங்கிலாந்து அணி வென்றால் கூட ஆஷஸ் தொடர் 2-2 என சம நிலையில் முடிவடையும். அப்படி நடந்தால் கடைசி முறை ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.