உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.
அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் கடைசி இரு பந்துகளையும் சிக்ஸர் விளாசி சதமடித்து அசத்தினார்.
அதன் பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் ஆடிய இந்திய அணி 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் ஆட்டமிழக்க அந்த பந்தை இந்திய வீரர் நிகின் ஜோஸ் கேட்ச் செய்து ஏதோ ஆக்ரோஷமாக பேச, இதற்கு சௌமியா சர்க்கார் ஏதோ கூற என மைதானத்தில் இரு தரப்பு வீரர்களும் மோதும் சூழல் உருவானது. அப்போது தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் சௌமியா சர்க்காரிடம் கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருக்கச்சொல்ல அதன் பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சாய் சுதர்சனின் செயலை பாராட்டி வளர்கின்றனர்.