உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சேர்க்கப்படாத நிலையில், அந்த நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் PSL லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. எனினும் PSL லீக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை விட மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு அதிக தொகை வழங்கப்படுகிறது. அந்த அளவு உலக அளவில் இந்தியா கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை இந்தியா விளையாட அனுமதிக்காதது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கவலைப்பட வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்காக உலகக்கோப்பை வென்ற கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் தொடரில் அனுமதிக்காதது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம்மிடம் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் உலகில் இந்தியா இப்போது ஒரு வல்லரசாக நடந்து கொள்ளும் விதத்தில் நிறைய ஆணவங்கள் உள்ளன. திமிர்பிடித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியை உருவாக்கும் திறன் ஐபிஎல் தொடரில் யார் விளையாட வேண்டும் என்று ஆணையிடும் அதிகாரத்தை அவர்களுக்கு அளித்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு கிரிக்கெட் வல்லரசின் ஆவணம் போல இருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.