இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 162 ரன்களை சேஸ் செய்த இலங்கை, 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரில், 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி.
162 ரன்கள் அடித்திருந்த இந்திய அணியின் பந்துவீச்சை ஹர்திக் பாண்டியாவே தொடங்கிவைத்தார். அவரோடு பவர்பிளேவில் பந்துவீச்சைத் தொடங்கிய இளம் அறிமுக வீரர் ஷிவம் மாவி. 4 ஓவர்கள் பந்துவீசிய அவர், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்டிருந்த நிலையில் அக்ஷர் படேலை பந்துவீச அழைத்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஹர்திக்குக்கு ஓவர் மீதமிருந்த நிலையில், அவர் பந்துவீசாமல் ஸ்பின்னர் அக்ஷரிடம் பந்தைக் கொடுத்தது ஒருசிலருக்குக் கேள்வியை எழுப்பியது. ஒருவேளை அவருக்கு மீண்டும் ஏதும் காயம் ஏற்பட்டதா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அதற்கான காரணத்தைப் போட்டிக்குப் பிறகு ஹர்திக்கே கூறியிருக்கிறார்.
"எந்த தருணத்தில் வேண்டுமானாலும் நாங்கள் போட்டியை இழந்திருக்கக்கூடும். இந்த அணியை நான் இக்கட்டான சூழ்நிலைகளுக்குத் தள்ள விரும்புகிறேன். அதுதான் பெரிய போட்டிகளில் எங்களுக்கு உதவியாக இருக்கும். இப்படியான விஷயங்களை முயற்சி செய்து பார்க்க, பைலேட்டரல் தொடர்கள் சரியான இடம். நாங்கள் எங்களுக்கு பெரிய சவால்கள் கொடுக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு இளம் வீரருமே இன்று எங்களை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அக்ஷர் படேல், பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். மற்றொரு ஆல் ரவுண்டரான தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடியதோடு நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமைக்க, தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்தது.
ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் இல்லாததால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா, அறிமுக வீரர் ஷிவம் மாவியையும் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
"மாவியுடனான என்னுடைய உரையாடல் மிகவும் சிம்பிளாகத்தான் இருந்தது. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி பார்த்திருக்கிறேன். அவருடைய பலம் என்ன என்பது எனக்குத் தெரியும். ரன் கொடுப்பது பற்றிக் கவலைப்படாமல் நம்பிக்கையோடு பந்துவீசு என்று மட்டும் தான் கூறினேன். 'நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். உனக்கு ஆதரவாக இருக்கப்போகிறேன். உன் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் அடித்தாலும் பரவாயில்லை கவலைப்படவேண்டாம்' என்று கூறினேன்" என்று மாவியிடம் கூறியது பற்றிப் பேசினார் ஹர்திக் பாண்டியா. 4 ஓவர்கள் பந்துவீசிய மாவி, 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தஷுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வரும் வியாழக்கிழமை விளையாடுகிறது. இந்தப் போட்டி புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.