உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்நீட்டி ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணி தக்கவைக்கும் வீர்ரகளின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் இன்று மாலை 5 மணிக்குள் ஐபிஎல் குழுவிடம் தாக்கல் செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியல் தொடர்பான தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன் ஒருபகுதியில் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியான மும்பை அணியில் இருந்து அதன் நட்சத்திர வீரர் கைரன் பொல்லார்ட் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை உறுதிசெய்யும் வகையில் பொல்லார்ட் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐபிஎல் தொடரில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார்.